கரூர் மாவட்டம் அருகே தரகம்பட்டியில் இருந்து வீரப்பூர் செல்லும் சுமார் 4 கிலோ மீட்டர் சாலை தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.12 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை போடப்பட்டு வருகிறது.
இதில் பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் பழைய சாலையின் மீது தார் ஊற்றாமல் அப்படியே ஜிப்சம் தார் கற்களை கொண்டு சாலை அமைத்துள்ளதாகவும், மேலும் பழைய சாலையில் இருந்த பள்ளங்களை முறையாக நிரப்பாமல் அதன் மீது தார்சாலை அமைத்துள்ளதால் தற்போதுள்ள புதிய ரோடு மேலும் பள்ளமாக இருப்பது போல் காட்சி அளிப்பதாகவும், மேலும் தார் சாலையானது தோசை கல்லை பெயர் எடுப்பது போல் கையில் வருவதாகவும், ஒப்பந்ததாரர் தார் சாலை தரமற்ற முறையில் அமைத்துள்ளதால் இந்த சாலையானது நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்க முடியாமல் மழைக்காலங்களில் சேதம் அடைந்து விடும் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தார் சாலை கையில் பெயர்ந்து வருவது போல் இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் அனுப்பி உள்ளனர்.
இதனை கண்ட அந்த ஒப்பந்ததாரர் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் தார் சாலை இவர்கள் கடப்பாரையைக் கொண்டு பெயர்த்து சாலையை சேதம் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
அங்கு வந்து சிந்தாமணிப்படி போலீசார் விசாரணையில் இளைஞர்கள் தாங்கள் கைகளால் பெயர்த்த சாலையின் வீடியோவை காட்டியுள்ளனர் மேலும் கடப்பாரையை கொண்டு தாங்கள்
ஏதும் செய்யவில்லை எனவும் தரமற்ற சாலையை ஒப்பந்தத்தார் போட்டுள்ளதாக கூறியதை அடுத்து போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.
மேலும் இது குறித்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராகுல் காந்தி என்பவர் பேட்டி அளிக்கையில் தரங்கம்பட்டி வீரப்பூர் சாலை சுமார் நான்கு கிலோ மீட்டர் தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.12 கோடி மதிப்பில் போடப்பட்டு வருவதாகவும், இந்த தார் சாலை இணை கடவுள் யூனியன் சேர்மன் செல்வராஜின் நண்பரான வீரராகவன் என்பவர் ஒப்பந்தம் எடுத்து வேலை பார்த்து வருவதாகவும் இதில் பழைய சாலையினை பெயர்த்து எடுக்காமலும், சாலையின் பள்ளங்களில் முறையாக நிரப்பாமல் அதன் மேல் ஜிப்சம் தார் கற்களை கொட்டி தரமற்ற முறையில் சாலை போட்டுள்ளதாகவும், ஊராட்சி ஒன்றிய பொறியாளருக்கு தகவல் தெரிவித்த போது அவர் சாலை தரமான முறையில் போட்டுள்ளதாகவும் பதில் அளித்ததாகவும், சாலை போடப்பட்ட மூன்று நாட்களுக்குள் தற்போதைய தோசை கல்லு போல் ஏடு ஏடாக பெயர் எடுத்து வருவதாகவும், எனவே இந்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து புதிய ஒப்பந்ததாரர் மூலம் தார் சாலையை பெயர்த்து எடுத்து மீண்டும் புதிதாக தரமான முறையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் இதுகுறித்து தாங்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதற்கு யூனியன் சேர்மன் செல்வராஜ் தூண்டுதல் பேரில் ஒப்பந்ததாரர் வீரராகவன் சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் போய் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் இது குறித்து ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணன் கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் சாலைகள் பழைய சாலையின் மீது ஜிப்சம் கற்களை கொண்டு மூன்று சென்டிமீட்டர் அளவிற்கு சாலை அமைத்து பலப்படுத்துவதற்கு மட்டும் ஆணை உள்ளதாகவும், ஒப்பந்ததாரர் தரமான முறையில் சாலை அமைத்துள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பொய்யான தகவலை பரப்புவதாகவும், தான் நேரில் சென்று பார்த்துள்ளதாகவும் மீண்டும் திங்கள் கிழமை தார் சாலையினை ஆய்வு செய்வதாகவும் கூறினார்.