கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், பஞ்சமாதேவி கிராமம் காளிபாளையம் வசந்த் நகரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக சாலை அமைக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டு கால யாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து யாக வேள்விக்கும், யாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த புனித கலசத்திற்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் மேல தாளங்கள் முழங்க இரண்டு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தை ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்து வாரு கோபுர கலசம் வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து வான வேடிக்கைகள் முழங்க பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பட்டாளம்மன் உள்ளிட்ட பரிவார
தெய்வங்களுக்கும் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் பஞ்சமாதேவி கிராமம் பகுதியில் நடைபெற்ற மகா மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷே விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.