கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் கோட்டச்சியார் கோவிலுக்கு சீல் வைத்தார்.
கோட்டாச்சியார் புஷ்பாதேவி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், கோட்டச்சியாரின் வாகனம் மோதி 17 வயது சிறுமி படுகாயமடைந்ததை கண்டித்தும் ஒரு தரப்பினர் கடந்த ஜூன் 9 ம் தோகைமலை பாளையம் சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை எந்த வித உடன்பாடும் ஏற்படாத காரணத்தினால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்று திருச்சி கரூர் உள்ளிட்ட சில மாவட்டகளை சேர்ந்த ஒரு தரப்பினர் தரகம்பட்டியில் 2000க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பேரணையாக சென்று வட்டாட்சியரிடம் மனு வழங்குவதாக இருந்தனர்.
தரகம்பட்டியில் ஒன்றுகூடி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து
நிறுத்தினார். சிறிது நேரம் வாக்குவாதத்திற்கு பின்னர் அவர்கள் பேரணியாக செல்ல அனுமதித்தனர்.
தரகம்பட்டி ஊர் எல்லையில் இருந்து தரகம்பட்டி வையம்பட்டி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வட்டாச்சியார் அலுவலத்திற்க்கு பேரணியாக வந்தவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் முக்கிய 10 நபர்கள் மட்டும் மனு அளிக்க உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்று கூறியதை அடுத்து முக்கிய 10 நபர்கள் மட்டும் வட்டாச்சியர் முனிராஜினை சந்தித்து மனு வழங்கினர்.
கோவிலை திறக்க கோரியும் அதற்க்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அதில் மாவட்ட நிர்வாகத்தின் முடிவிற்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்தனர்.
அந்த மனுவில் வீரணம்பட்டி கோவில் திருவிழாவில் மாற்று சமூகத்தை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் மதுப்போதையில் கோவிலுக்குள் நுழைய முயன்றதாகவும் அதனை தடுத்ததால் எங்களிடம் தகராறு செய்து திருவிழாவை நிறுத்துவதாக கூறி அதிகாரிகளுக்கு பொய் புகார் அளித்துள்ளதாகவும், இதனை கோட்டச்சியார் புஷ்பாதேவி உரிய விசாரணை மேற்கொள்ளாமல் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுள்ளதாகவும், எனவே வேறு மாவட்ட கோட்டாட்சியரை வைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், காலம் காலமாக தங்களது முன்னோர் மூதாதையர்கள் வழிகாட்டுதலின்படி வழிபாடு நடத்தி வந்த கோயிலை மீண்டும் திறக்க வேண்டும் எனவும், சுமுக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணாவிடில் எட்டு ஊர்களை சேர்ந்த தங்களது சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு திரும்ப ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இங்கு கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், ஏ டி எஸ் பி மோகன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்