கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர்களது மகன் , ஐஸ்வர்யன் . ஒன்பதரை வயது.
ஐஸ்வர்யன் காகித ஆலையில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கொரனோ கால கட்டத்தில் வீட்டிலேயே இருந்த சிறுவன், தனது தந்தை பயன்படுத்திய சிறிய ரக மியூசிக்கல் கீ போர்டை வாசித்து பழகியுள்ளார். அவரது மியூசிகல் ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை வெங்கமேட்டில் உள்ள மியூசிக் அக்காடமியில் பயிற்சிக்கு சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த ஆர்வத்துடன் மியூசிக் கீ போர்ட் வாசிப்பை திறமையுடன் கற்றுக் கொண்டார். கடந்த 4 ஆண்டுகளில் 8 கிரேடுகளை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக சிறுவனின் தந்தை கூகுளில் தேடிய போது பனிரெண்டரை வயது சிறுமி ஒருவர் 8 கிரேடு முடித்தது சாதனையாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஐஸ்வர்யனின் தந்தை ஆன் லைன் மூலமாக சாதனை புத்தகங்களுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட சாதனை புத்தக நிர்வாகத்தினர் ஐஸ்வர்யன் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியுள்ளனர். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட், யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகங்கள் ஐஸ்வர்யனின் சாதனையை அங்கீகரித்துள்ளனர்.
மியூசிக்கல் கீ போர்டில் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
12 வயது சிறுமி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் ஏற்கனவே இடம் பெற்றிருந்தார். அதனை ஒன்பதரை வயது ஐஸ்வர்யன் முறியடித்து உள்ளார்.