கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வஞ்சியம்மன் கோவில் தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வஞ்சியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் யாக வேள்வி நடத்தினர். அதில் முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி யென மூன்று கால யாக வேள்வி நடைபெற்ற பிறகு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித கலசத்திற்கும், சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார்.
அதைத் தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேல தாளங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த குடத்தை தலையில் சுமந்தவாறு கோபுரம் கலசம் வந்தடைந்த சிவாச்சாரியார். ஓம் சக்தி, பராசக்தி பக்தர்கள் கோஷத்துடன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மூலவர் வஞ்சியம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கும்
பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது வஞ்சியம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற வஞ்சியம்மன் மகா கும்பாபிஷே விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.