கரூர் தாந்தோணிமலை மலையில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத பெருந்திருவிழா மற்றும் தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் இந்தாண்டு மாசி மகத்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வேத மந்திரங்கள் மற்றும் இசை வாத்தியங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில்
கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 10-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 12-ஆம்தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும், 14-ஆம் தேதி தெப்பத்தேர் சுற்றி வருதல் நிகழ்வும் நடைபெற உள்ளது. 21-ஆம் தேதி புஷ்ப யாகத்துடன் திருவிழா முடிவடைகிறது. இந்த விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.