Skip to content
Home » கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

  • by Senthil

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாநகர் மைய பகுதியில் அமைந்துள்ள அறங்காதவல்லி சௌந்தரநாயகி சமைத்த அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

அப்போது நடராஜருக்கு பால், தயிர்,பன்னீர், சந்தனம், இளநீர், தேன், மஞ்சள், திருமஞ்சல், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்திற்கு பின்னர் நடராஜர் வடிவில் சிவபெருமான் காலை தூக்கி நடனமாடுவதை போல்,

சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன காட்சி அளித்தார். அப்போது மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்னர் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து சப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் திருவீதி உலா வந்தார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆலயத்தின் ராஜகோபுரம் முன்பு ஒரு பந்தலில் மட்டையடி உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடராஜருக்கும், அம்பாளுக்கும் இடையே சிறு ஊடல் ஏற்பட்டதாக சொல்லப்படும் ஐதீகத்தின்படி பசுபதீஸ்வரர் கோயிலில் இருவரும் தனித்தனியாக எழுந்தருள்வர்.

ஆகவே அவர்களை சமாதானம் செய்யும் வகையில் சுந்தரமூர்த்திநாயனார் பல்லக்கில் வந்து, அம்பாளிடம் முறையிட்டு சமாதானம் செய்வது சம்பிரதாயம். இதனை விளக்கும் விதமாக தண்டபாணி தேசிகர், சுந்தரராக தம்மை பாவித்து நடந்த நிகழ்ச்சிகளை கூறி தூது சென்றார்.

அப்போது இரண்டாவது முறையாக சென்றபோது, அம்பாளின் பணிப்பெண்கள் பூக்களால் சுந்தரரை அடிப்பது புராண வரலாறு. அந்த வகையில் தூது சென்ற தண்டபாணி தேசிகருக்கு வாழை மட்டையால் அடி விழுந்தது போல் அரங்கேற்றம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சண்டிகேசுவரருடன் சேர்ந்து வந்து சுந்தரமூர்த்தி நாயனார் பேசியபோது அம்பாள் கோபம் தணிந்து தெளிவு பெற்றார். பின்னர் நடராஜருடன் சேர்ந்து அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதற்கிடையே நிகழ்ச்சியின்போது பக்தர்கள் முண்டியடித்து கொண்டு வந்து, தங்களது முதுகினை காட்டி வாழைமட்டையால் அடி வாங்கி சென்றனர். இதன் மூலம் குழந்தை செல்வம், வியாபார விருத்தி உள்ளிட்டவை உண்டாகும் என்பது ஐதீகம். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!