மாசி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு (2024-2025) கல்வி ஆண்டில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஆலயம் சார்பாக பிரத்தியேக யாகங்கள் நடைபெற்றது.
பின்னர் மூலவர் கணபதிக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,
அபிஷேகப் பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக சிறப்பு யாகத்தில் வைக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மூலவர் கணபதிக்கு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் இந்தக் கல்வியாண்டில் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு அர்ச்சனை நடைபெற்று, கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆலயத்தின் சார்பாக எழுதுகோல் உள்ளிட்ட தேர்வுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வழங்கினர்.