கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகள் தங்களது முதல் தெய்வங்களான பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
கணபதி ஹோமம், சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் வழிபாட்டுடன் துவங்கிய
இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் தாய், தந்தையரின் பாதங்களை கழுவி சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அபிஷேகம் செய்து கற்பூரம் காட்டி பூஜை செய்தனர்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றிட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்.
பள்ளி இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் தவறான பாதைக்கு சென்று விடாமல், பெற்றோர் பேச்சைக் கேட்டு
அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கோடு, மனதளவில் அவர்களை தயார்படுத்தும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், பெற்றோர் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.