கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களை வைத்து போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக எழுதி பெற்றதாக புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் மீது வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நில மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு முறை மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு சாயப்பட்டறை அலுவலகம், அவரது தம்பி சேகர் வீடு, உறவினர் ராஜேந்திரன் வீடு, டிரஸ்ட் அலுவலகம், பெட்ரோல் பங்க் உட்பட ஏழு இடங்களில் இன்று காலை 7 மணி முதல் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த் துறையினரின் உதவியுடன் 8 மணி நேரமாக நடந்த சோதனை மாலை 3 மணிக்கு முடிந்தது. இந்த சோதனையில் டிரஸ்ட் அலுவலகம், நூல் குடோன் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஆவணங்கள் சிலவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.