கரூர், வடக்கு பிரதட்சணம் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (66). பத்திர எழுத்தரான இவர் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்வதற்காக, கரூர் பேருந்து நிலையத்தை கடந்து தின்னப்பா தியேட்டர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, வழியில் அவருடைய பணப்பையுடன் கூடிய அசல் ஆவணங்களை தவறி விட்டு விட்டார்.
இதனை அவ்வழியாக வந்த கரூரை சேர்ந்த லியாகத் உசேன் அன்சாரி என்பவர் எடுத்து வந்து கரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் திருவேங்கடத்தை காவல் நிலையத்திலிருந்து தொடர்பு கொண்டு தவறவிட்ட அவரது ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை எடுத்து வந்து கொடுத்த லியாகத் உசேன் அன்சாரி முன்னிலையில் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் உதவியாளர் நாகராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர். தவறவிட்ட பணத்தை அரை மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொண்ட முதியவர் திருவேங்கடம் காவல்துறை மற்றும் பணத்தை எடுத்து வந்து ஒப்படைத்த நபருக்கு நன்றி தெரிவித்தார்.