நவராத்திரி முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு ஆலய மண்டபத்தில் சுவாமிகளை ஊஞ்சலில் அமரும்படி செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் துளசி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சாமிகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. நவராத்திரி முன்னிட்டு அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் சேவை சிறப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.