கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் அடுத்த தமிழ் நகர் பகுதியில் ஆறுமுகம் – வெண்ணிலா தம்பதியர் கடந்த பத்தாண்டுகளாக வசித்து வருகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளாக பசு மாடுகள் வளர்ப்பில் ஈடுபட்டு, பால் கறந்து விற்பனை செய்து வருகின்றனர். பசு மாடுகளை அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரில் அமைந்துள்ள ரயில்வே கிராசிங் பகுதி ஓரத்தில், மேய்ச்சலுக்கு விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் லட்சுமி என்ற நான்கு வயது மாடு ஒன்று மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியதும், அடிக்கடி உடல் உபாதை ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் பகுதியை இரவு நேரத்தில் கண்காணித்துள்ளனர். அப்போது அருகில் உள்ள தில்லைநகர் பகுதியில் செயல்படும் சமோசா பலகாரத்திற்கு மைதா மாவு மூலமாக ரெடிமேட் லேயர்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் கழிவுகளைக்
கொண்டு வந்து மாடுகளை மேய்ச்சல் விடும் பகுதியில் கொட்டுவது தெரிந்துள்ளது. இது குறித்து அந்த நிறுவன உரிமையாளரிடம் பசு மாட்டின் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, உரிய பதில் தர மறுத்துள்ளார். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு சமோசா ரெடிமேட் மாவு கழிவுகளை சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது அதனால் ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக இன்று மதியம் சுமார் 12 மணியளவில் அந்த பசு மாடு லட்சுமி உயிரிழந்துள்ளது.
கழிவுகளை கொட்ட வேண்டாம் என்று பலமுறை கூறியும், அதை கண்டுகொள்ளாத அந்த நிறுவனத்தின் மீது பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்துள்ளார். உயிரிழந்த பசு மாடு லட்சுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்த அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.