கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கௌரிபுரம் பகுதியில் மகப்பேறு மருத்துவமனை, பொது மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை என மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான பார்க்கிங் ஏரியா மற்றும் வழித்தடம் உள்ளது. நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்துவிட்டு, பயன்படுத்திய நூற்றுக்கணக்கான குப்பிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் மர்ம நபர்கள் தெருவில் வீசி விட்டு சென்றுள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவக் கழிவுகளை தெருவில் வீசியது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கழிவுகளை கொட்டி விட்டு சென்ற நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.