கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக கன மழை பெய்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்துள்ள சுமார் 20 வருடம் பழமையான பிரம்மாண்ட வாகை மரம் ஒன்று அடிப்பகுதியில் பட்டுப்போய் உள்ளது. குறிப்பாக மூன்று பிரிவுகளாக செல்லும் இந்த வாகை மரத்தின் அடிப்பகுதி பட்டு போய் உள்ளதால், சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள ஒரு பகுதி மட்டும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சரிந்து சாலையில் விழுந்துள்ளது.
சுமார் 30 அடி உயரம் கொண்ட மரத்தின் ஒரு பகுதி சாலையில் சரிந்து விழுந்துள்ளதால், அரசு கலைக்கல்லூரி வழியாக பொன் நகர்
வரை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகனங்கள் மட்டும் அருகில் அமைந்துள்ள மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. அதே நேரம் பெரிய கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் மரம் சரிந்து விழுந்தது பற்றி கிடைத்த தகவலின் பெயரில், மாநகராட்சி ஊழியர்கள் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.