Skip to content
Home » கரூர் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடல்…. அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு…

கரூர் ரயில்வே அஞ்சல் நிலையம் மூடல்…. அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு…

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் தபால் நிலையங்களில் சேகரிக்கப்படும் தபால்கள் கரூர் ஜவஹர் பஜார் தலைமை தபால் நிலையத்திற்கு கொண்டு வந்து அவை பிரிக்கப்பட்டு பெட்டிகள், சாக்கு மூட்டைகளில் கட்டி ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. இரவு பகலாக செயல்பட்டு வந்த ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் இருந்து ரயில்கள் மூலம் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் மூடப்பட்டதால், தலைமை தபால் நிலையத்திலிருந்து தபால்களை சரக்கு வாகனம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் நடமுறைக்கு கொண்டு வந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட அனைத்து

கட்சியினர் கடிதங்களை திருச்சிக்கு கொண்டு செல்லக் கூடாது எனக் கூறி சரக்கு வாகனத்தில் கடித பெட்டிகளை ஏற்ற விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, அங்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வாகனத்தில் கடிதம் மற்றும் பார்சல்களை அனுப்ப வழிவகை செய்தனர். இதனை தொடர்ந்து கடிதம் மற்றும் பார்சல்களை ஏற்றிக் கொண்டு அந்த சரக்கு வாகனம் திருச்சி நோக்கி சென்றது.

அப்போது, அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொழில் நகரமான கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை, செட்டிநாடு சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருவதால் ஆர்.எம்.எஸ் தபால் நிலையம் மூலம் நாளொன்றுக்கு 25000 கடிதங்கள் 24 மணி நேரம் கையாளப்படுவதாகவும், இவை திருச்சி மாற்றப்பட்டால் நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே பார்சல்கள் திருச்சி அனுப்ப இயலும்,

இதனால் கடிதங்கள் விரைவாக சென்றடைவதில் கால தாமதம் ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு இந்தியா முழுவதும் 93 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 10 ஆர்.எம்.எஸ் தபால் நிலையங்கள் உள்ளதாகவும், அதில் கரூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *