கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்துள்ளது நாணப்பரப்பு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத்தில் திருவிழா விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்வு சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டின் திருவிழா கடந்த 14ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்வுடன் துவங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் இன்று விமர்சையாக நடைபெற்றது. காவிரி ஆற்றிலிருந்து மாரியம்மனை சின்ன தேரியில் எடுத்து வந்து கோவில் முன்பு எழுந்தருளச்செய்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
சுமார் 20 அடி நீளம் கொண்ட குண்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இதனை முன்னிட்டு சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை கம்பம் கிணற்றில் விடுவதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.