கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (60 )விவசாயி இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் சட்டத்தை மீறிய உறவு பழக்கம் இருந்து வந்ததாக தெரிய வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் கணவர் ராஜேந்திரன் உறவை கைவிடக் கூறி மனைவியிடம் கூறியுள்ளார்.
இருப்பினும் காசிநாதனும் அந்த பெண்ணும் உறவை கைவிட மறுத்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ராஜேந்திரன் கரூரிலிருந்து புகழூருக்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது பெரிய ஆண்டாங் கோவில் அக்ரஹாரம் அருகே சென்று கொண்டு இருந்த போது அப்பகுதி வழியாக வந்த காசி நாதனுடன் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்போது ராஜேந்திரனுக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த குரு பிரசாத் ,மற்றும் மதுமோகன் ஆகிய இருவரும் காசிநாதருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கத்தியால் காசிநாதனை தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து மூவரும் தப்பி சென்று விட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட ராஜேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.