ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த ரோஸ் காளி நாயுடு என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று ஆந்திர மாநிலம், சிலக்கலூர் பேட்டையில் இருந்து 30 எருமைகளை பொள்ளாச்சி சந்தை மூலம் சட்ட விரோதமாக கேரள மாநிலத்திற்கு அடிமாட்டிற்காக அனுப்புவதற்காக கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.
குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் வாகனத்தை நிறுத்தி, வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தமிழக இந்து மக்கள் முன்னணி மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் தகவல் அளித்துள்ளார். புகாரின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் 30 எருமை மாடுகளையும் மீட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசாலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். லாரியை பறிமுதல் செய்த போலீசார் எருமை மாடுகளை சட்டவிரோதமாக அடிமாட்டிற்கு அனுப்புவதற்காக உணவு, தண்ணீர் கொடுக்காமல் நெருக்கமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்து, கடத்திச் சென்ற குற்றத்திற்காக லாரியின் உரிமையாளர் ரோஸ் காளி நாயுடு, மாடுகளின் உரிமையாளர் சேகர் மற்றும் லாரி ஓட்டுநர் சேகர் ஆகிய மூவர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.