நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி சார்ந்தவர் ராதா நேற்று இரு சக்கர வாகனத்தில் கரூர் வந்துள்ளார். அப்போது, ஏற்கனவே பெட்ரோல் இருந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள் புரத்தில் செயல்படும் பாரத் பெட்ரோலியம் பெட்ரோல் பங்கில் 200 ரூபாய்க்கு தனது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பெட்ரோல் பங்கில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று சிறிது தூரத்தில் இரு சக்கர வாகனம் நின்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அருகில் பாலம்மாள் புரத்தில் உள்ள இரு சக்கர வாகன பழுது நீக்கும்
கடையில் விட்டு பார்த்த போது, பெட்ரோல் நிறம் மாறி இருந்துள்ளது. மேலும், மாற்று பெட்ரோலை கேன் மூலம் இணைத்து இயக்கினால், இரு சக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகியுள்ளது. இதனால் இந்த பங்கில் அடித்த பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதால் நிறம் மாறியும், வாகனம் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றம் சாட்டி அப்பகுதி இளைஞர்கள் அந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று ஊழியர்களிடம் பெட்ரோல் கேனை காண்பித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு, அப்போது பெட்ரோல் பங்கில் இருந்த ஒரு பம்பில் கேனில் பெட்ரோல் பிடித்து அதன் அடர்த்தியையும், நேற்று அவர்கள் இரு சக்கர வாகனத்தில் நேற்று நிரப்பிய பெட்ரோலையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். இரண்டு பெட்ரோலின் அடர்த்தியும், வெப்பநிலையும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருந்தது. இரு சக்கர வாகனத்தில் வேறு எதும் பிரச்சினை இருக்கலாம் என பங்க் ஊழியர்கள் அவர்களிடம் விளக்கமளித்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக பெட்ரோல் பங்கில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.