கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலை சுற்றியுள்ள பல நூறு ஏக்கர் நிலங்கள் இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்கள் எனக் கூறி அதனை மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது.
கோவிலை சுற்றியுள்ள இடத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டியும், விவசாயம் செய்து வரும் பொதுமக்கள் இவை தங்களுக்கான இடங்கள் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும், பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்யும் படி குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில் தனியார் பெயரில் இருந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்ட சர்வே எண்களில் உள்ள விவசாய, காலி நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை அமைக்கும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள் பலத்த போலீஸ்
பாதுகாப்புடன் காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கோவில் முன்புறம் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதே நேரத்தில் கோவிலுக்கு அருகில் உள்ள ஜெயராமன் என்ற விவசாயிக்கு சொந்தமான கோவில் விவசாய நிலத்தில் அறிவிப்பு பலகை வைத்தனர். இதற்கு ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வாக்குவாதத்தின் போது அந்த இடத்தின் உரிமையாளர் தீ குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அறிவிப்பு பலகையை நட்டு வைத்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.
மேலும், ஆதாரங்கள் இருந்தால் கோவில் அலுவலகத்தில் கொடுக்கும்படி அறிவுறுத்திச் சென்றனர். காலை முதல் 7 இடங்களில் இது போன்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மேலும் 5 இடங்களில் அப்பகுதி பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அறிவிப்பு பலகைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் வைத்து வருகின்றனர்.