கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி நெடுஞ்சாலையில் அருகில் அரசுக்கு சொந்தமான சுமார் 75 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளனர். பெரியண்ணன் என்பவர் ஆக்கிரமித்த அந்த அரசு புறம்போக்கு நிலத்தை அவர் இறந்த பின்னர், அவரது வாரிசுகளான ராமலிங்கம், நடேசன், தங்கம்மாள், அமிர்தம், பாலசுந்தரி, பானுமதி, கோவிந்தராஜ் ஆகியோர் பயன்படுத்தி வந்துள்ளனர். ராமலிங்கம் டிஎன்பிஎல் காகித ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நடேசன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மற்ற நபர்கள் மத்திய, மாநில அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆக்கிரப்பு நிலத்தை ஒப்படைக்குமாறு வருவாய் துறையினர் பலமுறை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
நிலத்தை ஒப்படைக்காத காரணத்தால் கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமையில் காவல்துறை
பாதுகாப்புடன் அப்பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் ஓட்டு வீடு அமைந்துள்ள 3 சென்ட் இடத்தை மட்டும் விட்டு விட்டு பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டு வேலி அமைத்தனர். கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த நிலம் ஒரு சென்ட் சுமார் 15 லட்சம் ரூபாய் என்றும், மொத்தமுள்ள 75 சென்ட் இடத்தின் மதிப்பு சுமார் 11 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் நடவடிக்கையின் போது, பெண்கள் சிலர் தலையில் அடித்துக் கொண்டு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.