கரூர் மக்களவை தொகுதி பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அக் கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நாட்டா கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து நேற்று பேசினார். சுமார் 2 ஆயிரம் பேர் மண்டபத்தில் அமர்ந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் வேட்பாளர் செந்தில்நாதன் பேசத் தொடங்கினார். அப்போது மதியம் 12.35 மணி இருக்கும். வேட்பாளர் பேசத் ஆரம்பித்ததும் மக்கள் கிளம்ப தொடங்கினர். மேடையில் இருந்த நிர்வாகிகள் உட்காருங்கள் என கூறியும் பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக எழுந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் நட்டா பேசத் தொடங்கினார். அப்போது கூட்டத்தினர் குபீரென எழுந்து நடையை கட்டினர். இதனால் மண்டபத்தின் பெரும்பாலான பகுதியில் சேர்கள் காலியாக கிடந்தது. பெரும்பாலான நாற்காலிகள் காலியானதால் அதிர்ச்சி அடைந்த பாஜக நிர்வாகிகள் வெளியே செல்லும் மக்களை தடுத்து நிறுத்தி் உட்காருங்கள் இன்னும் 15 நிமிடம் தான் என்றார்கள். ஆனால் அவர்கள் கேட்காமல் கிளம்பிக்கொண்டே இருந்தனர். பெரும்பாலான நாற்காலிகள் காலியாகி போன நிலையில் நட்டா இந்தியில் பேசினார். சுமார் 400 பேர் மட்டுமே கடைசி வரை மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்.