கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சந்தோஷ் குமார், பிரகாஷ் என்பவரை தலையில் பாட்டிலால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து பிரகாஷ் நண்பர்களுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திருப்பும் போது, தொழிற்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த சந்தோஷ் குமாரை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
அப்போது, அங்கிருந்த அவரது மற்ற நண்பர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி நள்ளிரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் நரிகட்டியூர், தில்லை நகரை சார்ந்த பிரகாஷ், நத்தமேட்டை சார்ந்த சந்தோஷ் ஆகியோரை கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரகாஷ் என்பவர் மீது பசுபதிபாளையம் மற்றும் வெங்கமேடு காவல் நிலையங்களிலும், சந்தோஷ் என்பவர் மீது பசுபதிபாளையம் மற்றும் தாந்தோணிமலை காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் மீது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் உத்தரவின் படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.