கரூர் மாவட்டம் புலியூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த டெக்ஸ்டைல் கூலி தொழிலாளியான அன்பரசன் மற்றும் சங்ககிரி தம்பதியரின் இளைய மகன் பாரதி (10) கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். புலியூரில் இருந்து, தனது தந்தையின் தாய் தந்தை செல்லம்மாள் பொன்னுசாமி, வீடான புகலூர் அருகே உள்ள செம்படாபாளையம் செந்தூர் நகர் பகுதிக்கு பொங்கல் கொண்டாட தனது மகன் பாரதியை அன்பரசன் அனுப்பியிருந்தார். நேற்று மாலை பாட்டியின் வீட்டின் முன்பு, விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாரதியை, அவரது சித்தப்பா மோகன்ராஜ் ( 40) அரிவாளால் திடீரென வெட்டினார். இதில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுவனுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிறுவன் பாரதி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தான். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வேலாயுதம்பாளையம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளி மோகன் ராஜை பிடித்து பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். குற்றவாளி மோகன்ராஜ் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் விடுதலை பெற்று திரும்பி இருந்தார். இந்த நிலையில் மோகன்ராஜ், அண்ணனின் பத்து வயது மகன் பாரதியை எந்த காரணத்திற்காக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார் என்பது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..