கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் நடும் விழா மே 12ம் தேதி துவங்கியது. கம்பத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர். தொடர்ந்து 17ம் தேதி (வெள்ளி) பூச்செரிதல் விழாவும், 16 17 ம் தேதிகளில் மகா சண்டியாக பெருவிழாவும், 19ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் 27ம் தேதி திருத்தேர் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் 27, 28, 29 ம்தேதிகளில் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம், மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றி வழிபட்டனர். முக்கிய விழாவான கம்பத்தை ஆற்றுக்கு அனுப்பும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவிலில் இருந்து கம்பம் எடுக்கப்பட்டு அலங்கார ரதத்தில் கொண்டுவரப்பட்டது. வழிநெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அமராவதி ஆற்றுக்கு வந்து ஆற்றில் கம்பம் விடப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான இந்த திருவிழாவில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரமாண்ட வாண வேடிக்கை நடைபெற்றது. கம்பம் விடும் விழாவையொட்டி கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் இந்த திருவிழாவில் பாதுகாப்பு பணிக்காக திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.