Skip to content

கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் 49 இடங்களில் இருந்து பூத்தட்டு ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அணிவகுத்து வந்தன.

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. 29-ந்தேதி வரை  விழா நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நேற்று  நடந்தது. இதனையொட்டி நேற்று காலை கோவில் மண்டபத்தில் மகாசண்டிஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பூச்சொரிதல் விழாவையொட்டி கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு கொண்டு வந்து வழிபடுவது வழக்கம். அந்தவகையில் கரூர், வெங்கமேடு,
தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம்,
காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 49 பூத்தட்டுகள் மாரியம்மன் கோவில் வரை கொண்டு வந்தனர்.

அவர்கள் தங்களது பகுதியில் இருந்து அம்மனை அலங்கரித்து ரதத்தில் வைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். ரதத்தினை பின்தொடர்ந்தபடியே பக்தர்கள் அம்மனை மனமுருக வேண்டியபடி பூத்தட்டுகளுடன் நடந்து வந்தனர். அப்போது ரதத்திற்கு முன்பாக வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு, இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அம்மன் ரதங்களுடன் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த பூத்தட்டு ஊர்லமானது வரிசையாக கரூர் மாரியம்மன் கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. அப்போது பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூக்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூரில் பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வருகின்ற 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். கரூர் மாவட்டமே அன்றைய தினம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இந்த விழாவையொட்டி வரும் 29.05.2024 புதன்கிழமை அன்று  ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல்  உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக 8.6.2024 சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாக  அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!