Skip to content
Home » மாற்றுத்திறனாளி பெண்….. கரூர் கலெக்டரிடம் உருக்கமான மனு

மாற்றுத்திறனாளி பெண்….. கரூர் கலெக்டரிடம் உருக்கமான மனு

கரூர் மாவட்டம், சேங்கல் அடுத்த வடவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஜோதி (39). இளம் வயதில் கண் பார்வை இழந்தவர். இவரது கணவர் சக்திவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்  இறந்துவிட்டார். இவருக்கு கௌசல்யா (8) கனிஷ்கா (6) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவனை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் கண் பார்வை இழந்த ஜெயஜோதி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் 35 கிலோமீட்டர் தூரம் 2 பேருந்துகள் மாறி பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, ஆதரவின்றி தவிக்கும் தனக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரியும், இலவச வீடு வழங்கக் கோரியும் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அப்போது ஆவணங்களை எடுத்து வர சொல்லி மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள் ஜெயஜோதியை அலைக்கழித்து வந்ததாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை கடிந்து கொண்டதோடு, கணவனை இழந்து வாடும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உரிய உதவிகளை உடனடியாக செய்து தரவும், இலவச வீடு வழங்கவும் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் ஜெயஜோதியின் சொந்த ஊரில் வீடு கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக அந்த கட்டுமான பணி பாதியில் நிற்பதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இது தொடர்பாக இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த மாற்றுத்திறனாளி ஜெயஜோதி, தனக்காக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இலவச வீடு கட்டுமான பணியானது தொடங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில். தற்போது அந்த பணியானது பாதியில் நிற்பதாகவும், தற்போது உறவினர் வீட்டில் தங்கி உள்ளதாகவும் அங்கிருந்து வெளியே சென்றால் வேறு வழி இல்லை எனவும், ஆதரவின்றி தவித்து வரும் தனக்கு உதவி செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேலை நேரில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை வழங்கினார்.

இந்த ஆதரவின்றி இருக்கும் இரண்டு குழந்தைகள் எப்படி இருக்குமோ என்று தன் தாய்க்கு தெரியாத தாயின் ஏக்கம் அந்த இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பாதியிலேயே நிற்கும் வீட்டை உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!