கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த மேலவிட்டுகட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி நர்மதா. இவர் அதே ஊரை சேர்ந்த வைரமணி என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 58 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி வாழை தோட்டம் அமைத்து விவசாயம் நடத்தி வந்துள்ளார்.
நிலத்தை விற்பனை செய்த வைரமணி தங்கராஜ் நர்மதாவுக்கு சொந்தமான நிலத்திற்கு செல்லும் வாய்க்கால் மற்றும் வடிகால்கள் மூலம் தண்ணீர் செல்லும் வழிகளை அடைத்துள்ளார் . இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது . இது குறித்து இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த நர்மதா விவசாய நிலத்தை தனக்கு விற்பனை செய்த வைரமணி என்பவர், விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியதோடு குடும்பத்தில் இருப்பவர்களை
கொன்று விடுவேன் என்று உயிர் பயம் காட்டுவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
எலி மருந்து சாப்பிட்டுவிட்டு வந்ததாக தெரிவித்து கதறி அழுதார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து எலி மருந்து பாக்கெட்டுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.