கரூர் மாவட்டம் க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலான அளவு பள்ளம் தோண்டி பாறைகளை வெட்டி எடுத்து கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட் மணல்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தாழையூத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ப்ளூ மெட்டல் கல்குவாரியில் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வந்த நிலையில், 100 அடி ஆழக்குழியில் 3 அடி அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இதை எடுப்பதற்காக நாகப்பட்டினம் ஆயங்குடி பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் (41) என்ற ஓட்டுனநரை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில்
ஈடுபடுத்தி உள்ளனர். தண்ணீரை எடுப்பதற்காக 22000 லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரியில் தண்ணீர் நிரப்பி, மேலே வந்து கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக 75 அடி உயரத்திலிருந்து லாரி பாறைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு, பாறை குழி இடுக்கில் தலை மற்றும் உடல் பகுதிகள் நசுங்கி மயக்க நிலையில் சிக்கி இருந்த ஓட்டுநரை கீழே சென்று மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குழியில் உரிய பாதுகாப்பின்றி லாரி ஓட்டுநரை பணியில் ஈடுபடுத்தியதாக செல்வ விநாயகா ப்ளூ மெட்டல் உரிமையாளர்களின் ஒருவரான அமமுக மாவட்ட செயலாளர் தங்கவேல் மற்றும் பங்குதாரர்களான சுப்பிரமணி, சக்திவேல், கந்தசாமி ஆகிய 4 பேர் மீது க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.