உலக போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குடிபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் காஜாமலை மகளிர் மன்றம் சார்பில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
போதைக்கு அடிமையானோரையும், அவரது குடும்பத்தையும் மீட்டெடுத்து மறுவாழ்வு அளிப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.
பேரணி, வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம், பாரதிதாசன் சாலை வழியாக சென்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை சென்று நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். அவர்கள் கையிலும் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பிடித்து இருந்தனர்.
கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியில் போதைப் பொருள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதை பொருள் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ் முழுவதும் சுற்றி வந்து முடிவடைந்தது.
இந்தப் பேரணியை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கொடி அசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
கரூரிலும் இதுபோல போதை பொருள் எதிர்ப்பு பேரணி நடந்தது.பேரணியை, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தொடங்கி வைத்தனர். இப்பேரணி கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி திண்ணப்ப கார்னர் ,பேருந்து நிலையம் ரவுண்டானா வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் லந்து கொண்டனர்.