கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கற்பகம் நகரில், 200-க்கும் மேற்பட்ட வீடுகளும், 1,000க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். இதில், வெங்கக்கல்பட்டி மேம்பாலம் முதல் ஏமூர் ஊராட்சி அலுவலகம் வரை கற்பகம் நகர் வழியே செல்ல மண் சாலை இருந்தது.
3 ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி எல்லையில் இருந்து ஊராட்சியை இணைக்கும் வகையில் தார்சாலை அமைக்க ஜல்லி போடப்பட்ட நிலையில், பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் மழை போன்ற காரணங்களால் சாலை அரிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இந்த குண்டும், குழியுமான சாலையில் தினமும் பயணித்து வருவதோடு, குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அலுவலகம் செல்லும் ஊழியர்களும் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் கூட பயணிக்க முடியாத நிலையில் சாலை உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரத்தில் இந்த சாலையில் வாகனத்தில்
செல்லும்போது கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் சாலை, தெரு விளக்கு வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த திங்கட்கிழமை மக்கள் குறைவினால் கூட்டத்தில் மூன்றாவது முறையாக மனு அளித்ததில் மூன்று மாதத்திற்குள் சரி செய்து தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் கிளம்பிச் சென்றோம் சரி செய்யாவிட்டால் அடுத்த கட்ட போராட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.