அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் கலைத்திருவிழா என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், இப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.கலைத்திருவிழாவில் பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, ஓவிய போட்டி, இசைக்கருவிகள் வாசித்தல், சிற்பம் செதுக்குதல் என தனித்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் 84 போட்டிகள் நடத்தப்பட்டது. வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் 63,405 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், 30,560 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். வட்டாரப் பள்ளிகள் அளவில் 5,329 மாணவ மாணவிகள் பங்கேற்றதில் 3,266 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். மாவட்ட அளவில் 1,547 பங்கேற்றதில் 966 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். இதில் 43 மாற்றுத்திறனாளிகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 1009 மாணவ, மாணவிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சொந்த செலவில் சான்றிதழ்கள் கோப்பைகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்வில் தொடர்ந்து, சுமார் இரண்டரை மணி நேரம் மேடையில் நின்றவாறு அனைத்து மாணவ, மாணவிகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில் ‘ ஏற்கனவே அதிகாரிகளிடம் வெற்றி பெற்ற அனைவருக்கும் நானே பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்குவேன் என கூறியிருந்தேன் அதன்படி நானே 1009 மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்குவேன் என கூறியதும் அரங்கில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பினர். மேலும் அமைச்சர் தனதுபேச்சில் நானும் அரசு பள்ளி மற்றும் அரசு கலைக்கல்லூரியில் படித்தவன் என்பதனை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன். மேலும் இந்த விழா நமது குடும்ப விழா என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.