கரூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து கோவை மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என பேருந்து நடத்துனர் பயணிகளிடம் கூறியதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவையை நோக்கி அரசு பேருந்து ஒன்று க.பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயணிகளுக்கு ஆதரவாக, அரசு பேருந்தை சிறைபிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த க.பரமத்தி காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை மீட்டு அனுப்பி வைத்தனர். இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.