கரூர், அருகே அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது, அருகில் இருந்த பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு – இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 2 பேரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை.
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய மூன்று கட்டிட தொழிலாளிகள் அஸ்திவாரம் பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் இருந்த பழமையான ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து, கட்டிட தொழிலாளி சிவாஜி என்பவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயம் அடைந்த ராஜேந்திரன் என்பவரை மீட்டு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட மாயவன் என்பவரை, 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதியதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்கு சுற்று சுவர் கட்டுவதற்காக குழி தோண்டும்போது பாரம் தாங்காமல் பழைய வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் வெங்கமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.