கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் 100க்கும் மேற்பட்ட பெண்கள், முதியவர் என பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பஞ்சாயத்துகளில் உள்ள பணியாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவதற்கு பதிலாக, பெயரளவிற்கு வெறும் 10 நாட்கள் அல்லது 15 நாட்கள் மட்டுமே வேலை கொடுத்து வருகின்றனர் என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று சிந்தலவாடி ஊராட்சி கீழசிந்தலவாடி பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலைப்பணி வழங்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
அரசு விதிமுறைப்படி 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும், பெயரளவிற்கு 10,15 நாட்கள் மட்டும் வேலை வழங்கி மக்களை ஏமாற்றக் கூடாது என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால், சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.