கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் தலா 6 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் பல முறை ஒத்திவைக்கப்பட்ட துணைத்தலைவர் தேர்தல் இன்று ஐகோர்ட் உத்தரவுபடி நடந்தது. இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட இருந்த வேட்பாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கரூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் 5வது வார்டு உறுப்பினர் தேன்மொழி போட்டியிட்டார். அதிமுக சார்பில் ரமேஷ் போட்டியிட்டார். ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டி சீல்வைக்கப்பட்டு ஐகோர்ட் உத்தரவுப்படி மதுரை ஐகோர்ட் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அங்கு தான் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
முன்னதாக தேர்தல் நடைபெறும் இடத்தில் திமுக, அதிமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.