கரூர் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை ஒட்டி கடந்த 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி ஜவகர் பஜார் மற்றும் அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமான தரை கடைகள் அமைத்து வருகின்றனர். குறிப்பாக அமராவதி ஆற்றில் ராட்டினங்கள், பொழுது போக்கு அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது அதிக மழைபெய்தால்அமராவதி ஆற்றில் நீர் வரத்து காரணமாக அப்பகுதி முழுவதும் சேரும், சகதியுமாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவிழா சமயத்தில் ராட்டினங்கள் செயல்பட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவும்ராட்டினங்கள் அமைக்கும் பணியை உடனடியாக அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 2003-ம் ஆண்டு திருவிழாவின் போது அமராவதி ஆற்றில் மழைக்காலத்தில் ராட்டினம் விபத்துக்குள்ளாகி 10 நபர்கள் உயிரிழந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ராட்டினங்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.