தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சி பகுதியில் தரைக்கடைகளுக்கு சட்டவிரோதமாக சுங்க வரி வசூல் செய்வதாக எழுந்த புகார் – ஆய்வில் ஈடுபட்ட மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கையால் தரைக்கடை வியாபாரிகள் மகிழ்ச்சி.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஜவகர் பஜார், மடவளாகம், திருவள்ளுவர் விளையாட்டு மைதான வெளிப்புற பகுதி என பல இடங்களில் சாலை ஓரத்தில் ரெடிமேட், ஜவுளி துணிகள், பேன்சி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் தற்காலிக தரைக்கடைகள் சுமார் 500க்கும் மேல் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது ஆண்டுதோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் இப்பகுதியில் சுமார் 4 முதல் 5 நாட்கள் கடை அமைப்பது வழக்கம். இந்த தரைக்கடைகளுக்கு தினசரி ரூ.200 முதல் 300 ரூபாய் வரை சுங்கம் வசூல் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தரைக்கடைகளுக்கு மாநகராட்சி மூலம் வசூல் செய்யப்படும் சுங்க வரி
ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தரைக்கடை வியாபாரிகளிடம் ஒரு சிலர் சட்டவிரோதமாக சுங்கம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் தரைக்கடை உரிமையாளர்களிடம் நேரடியாக சென்று ஆணையர் சரவணகுமார் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தை சுற்றி அமைக்கப்பட்ட பந்தல்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். தரைக்கடை வியாபாரிகள் யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது என்றும், பணம் கேட்கும் நபர்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறு கூறினார்.
ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கை வெளி மாவட்டத்தில் இருந்து வந்திருக்கும் 500க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.