கரூர் – வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொழுந்து விட்டு எரியும் தீயானது, மழை போல் குவிந்துள்ள குப்பை மேட்டில் பரவி அப்பகுதி முழுவதும் அனலைக் கக்கி வருகிறது.
மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட தனியார் டேங்கர் லாரிகள் மூலம் கரூர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தீ விபத்துக்கான காரணம் குறித்து கேட்டறிந்து நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்து வருகிறார். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடன் உள்ளனர்.
தீ விபத்து காரணமாக கரூர் அரசு காலணி வழியாக வாங்கல் செல்லும் வாகன போக்குவரத்து போலீசார் மூலம் மாற்றி விடப்பட்டுள்ளது.
மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக இருந்தாலும் மழை போல் குவிந்துள்ள குப்பைகளில் தீ பற்றி எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக உள்ளது. இதனால் சுற்றி உள்ள பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.