கரூர் அருகே தளவாபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தளவாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர் நிலத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்ததற்கு, 1 கோடியே 80 லட்சம் வாடகை நிலுவைத் தொகை செலுத்தாமல் கல்லூரி நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கல்லூரியின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ மாணவிகள்போராட்டத்தில் குதித்தனர். கல்லூரி நிர்வாகம் மாணவ, மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
பிரச்சனை என்னவென்று தெரியாமல் அப்பாவி மாணவ,மாணவிகளை போராட்டத்தில் ஈடுபடுத்துவது சரியல்ல என டி.எஸ்.பி அப்துல் கபூர் ஒலிபெருக்கியில் அறிவுரை கூறியபோது, கல்லூரி நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி நிர்வாகம் கேட்டை பூட்டி கடும் வெயிலில் மாணவ, மாணவிகளை நிறுத்தி வைத்து, சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபடுத்தியது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாணவர்களை படிக்க அனுப்பினோமோ, கல்லூரிக்காக போராட அனுப்பினோமோ என பெற்றோர்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, போலீசார் மற்றும் அதிகாரிகள் அறிவுரையை ஏற்று, மாணவ மாணவிகள் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் வாடகை நிலுவைத் தொகை உள்ளதால் கல்லூரி நிர்வாகத்தின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்வதற்காக அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். கல்லூரி வாயில் முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.