கரூர், அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. படிக்கும் மாணவி, இன்று மதியம் 12.30 மணிக்கு கல்லூரிக்கு தோழிகளுடன் சென்று கொண்டிருந்தார். பஸ்சில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றபோது திடீரென அங்கு வந்த ஆம்னி வேன், மாணவி அருகில் நிறுத்தப்பட்டது.
வேனில் இருந்து இறங்கிய சில வாலிபர்கள் பி. ஏ. படிக்கும் மாணவியை தூக்கி வேனில் போட்டனர். வேன் வேகமாக சென்று விட்டது. மாணவி கூச்சல் போட்டார். ஆனாலும் அவர்கள் விடவில்லை. இது குறித்து சக மாணவிகள் தாந்தோணிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கடத்தப்பட்ட மாணவி, ஈசநத்தத்தை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த காதலுக்கு மாணவி பச்சைக்கொடி காட்டவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒருதலைக்காதலன், மாணவியின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
இதை அறிந்த மாணவி, அந்த வாலிபரை கண்டித்து உள்ளார். இதனால் அவர் இன்று மாணவியை கடத்திச்சென்று விட்டதாக தெரிகிறது. அவர் எங்கே கடத்திச்சென்றார் என போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.