நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செயல்படும் தனியார் (KSR) கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்திலிருந்து வரும் வழியில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கரூர் நகர் வழியாக சென்று திருச்செங்கோட்டிற்கு கொண்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது, கோவையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் கரிகாளி நோக்கி சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரி வந்து கொண்டிருந்த போது தனியார் கல்லூரி பேருந்து அதிவேகமாக வருவதை பார்த்த லாரி ஓட்டுநர் லாரியை வலது பக்கமாக திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து முன்னாள் அமர்ந்திருந்த மாணவிக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தனியார் கல்லூரி பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகள் அந்த வழியாக வந்த அதே கல்லூரி பேருந்தில் ஏறிச் சென்றனர். பல மாணவர்கள் பேருந்திற்குள் ஏற முடியாததால் திரும்பிச் சென்றனர். இந்த விபத்து குறித்து கரூர் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்பதால் அளவுக்கு அதிகமான மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக பேருந்து இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.