கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து நேற்று அதிகாரிகள் சிலை கூடத்திற்கு சீல் வைத்தனர்.
பல லட்சம் முதலீடு செய்து விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளதாக அந்த தொழிலாளர், சிலை செய்ய பணம் கொடுத்தவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை குறித்து, விளக்கம் அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
மத்திய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் செய்யப்படுவதாக, மண்பாண்ட தொழிலாளர்கள் மூலமாக வந்த புகாரின் அடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். மாசு ஏற்படுத்தும் வகையில் சிலைகள் செய்யக்கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், தொடர்ந்து அப்பகுதியில் சிலைகள் செய்யப்பட்டதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வட மாநில தொழிலாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் வருகின்ற 25ஆம் தேதி அனைத்து சிலைகளும் திரும்ப ஒப்படைக்கப்படும். அரசு அறிவுறுத்தியபடி களிமண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களில் தயார் செய்யப்பட்ட சிலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.