கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்து திரண்டதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், ரங்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகள் இணையும் கட்டளை பகுதியில் இருந்து, கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், கரூர் மாநகராட்சி, புலியூர் பேரூராட்சி, உக்கடமங்கலம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்கிறது.
ஆனால், திட்டம் செயல்படும் ரங்கநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்குவதில்லை என்று அப்பகுதியில் குற்றச்சாட்டு வைக்கின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை இருந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என்ற கோரிக்கையுடன், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு காலி குடங்களுடன் வந்த 50க்கும் மேற்பட்ட அப்பகுதி பெண்கள் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷம் இடுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தபோது சலசலப்பு ஏற்பட்டது. மேலும், அமைதியான முறையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.