கரூர் மாவட்டத்தில் கடந்த 09.02.2023 முதல் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு, மணல் விநியோகம் நடைபெற்று வருகிறது . லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் என தனித்தனி மையங்களில் மணல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலை உள்ளது. மணல் லாரிகள் மூலம் நேரடியாக ஆறுகளில் இருந்து மணல் எடுப்பதால் விதிமுறைகளை பின்பற்றாமாலும், லாப நோக்கிலும் நேரடியாக விற்பனைக்கு எடுத்துச் செல்லும் நிலைமையும் தலைதூக்கி உள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தும் காலம் இருந்தும் குறுகிய காலத்திலேயே முடிக்கும் வேகம் காட்டப்படுகிறது.
இதனால் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக லாரிகள் மூலம் மணல் அள்ளப்படுவதற்கும், லாரிகளுக்கு மணல் விநியோகிப்பதை ரத்து
செய்தால் மட்டுமே மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். முறைகேடுகளையும் தடுக்க முடியும்.
அமலாக்கத்துறை ஆய்வுகள் காரணமாக மணல் விநியோக பணிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட வேலையின்றி மாட்டுவண்டி தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு உள்ளாகி, கால்நடைகளை பராமரிக்க பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆகவே மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க மாட்டுவண்டிகளுக்கு நேரடியாக மணல் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் கரூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் மனு வழங்கினர்.