ஈரோட்டிலிருந்து கரூர் வழியாக, திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டாங்கோவில் பிரிவு சாலை அருகே சென்ற போது, சின்னாண்டாங் கோவில் சாலையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் தனது 2 பேரன்களை அழைத்துக் கொண்டு வந்த நபர், அரசுப் பேருந்தை கவனிக்காமல் திருச்சி சாலையின் இடது பக்கத்திற்கு கடந்து வந்துள்ளார்.
இதனை பார்த்த அரசு பேருந்து ஓட்டுநர் இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பேருந்தை இடது பக்கமாக இயக்கினார். அதற்குள் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் குழந்தைகளுடன் பேருந்தின் அடிப்பகுதியில் விழுந்தனர். இதனை கவனித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முற்பட்ட போது, சாலையின் ஓரத்தில் இருந்த மின்மாற்றியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அருகில் இருந்தவர்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை நிறுத்தியதுடன், பேருந்தின் அடியில் சிறு காயங்களுடன் சிக்கிய குழந்தைகளை மீட்டு அவரது பெற்றோரை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் வந்த பயணிகள் அங்கேயே காத்திருந்து மாற்றுப் பேருந்தில் ஏறிச் சென்றனர். அரசுப் பேருந்து
மின்மாற்றியில் மோதியதால் மின்மாற்றியில் நிரப்பப்பட்டிருந்த 250 லிட்டர் கூலிங் ஆயில் தரையில் ஒழுகி வீணாகியது.
தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை மாற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இந்த மின்மாற்றி மாற்றப்பட்டதாகவும், அதன் மதிப்பு சுமார் 8 லட்சம் வரை செலவாகும் என மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வருவதற்குள்ளாக அரசு பேருந்து ஓட்டுநரும், இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரும், ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை பாதுகாப்பாக வைத்திருந்து விசாரணைக்கு வந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவரை போலீசார் கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், அரசுப் பேருந்தையும் காவல் நிலையத்திற்கு ஓட்டுநர், நடத்துனருடன் அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.