100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் 100 நில மோசடி வழக்கு மற்றும் ஆட்கடத்தல், கொலை மிரட்டல் வழக்கு ஆகியவை விஜயபாஸ்கர் மீது போடப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக மோசடி வழக்கில் விஜயபாஸ்கரை கஸ்டடி எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இதனையடுத்து இன்று திருச்சி மத்திய சிறையில் இருந்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜர் படுத்தப்பட்டார், அவரை 3 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தரப்பில் நீதிபதியிடம் அனுமதி கேட்டனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார் 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதனையடுத்து விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர். புதன்கிழமை மதியம் விஜயபாஸ்கர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.