கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிந்தனர். இதையடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார்.
35 நாள்களுக்குப் பிறகு ஜூலை 16 ம் தேதி எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதே வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் கடந்த 2ம் தேதி சிபிசிஐடி போலீசார் கரூரில் எம்.ஆர்.சேகரை கைது செய்தனர். அவருடன் சேர்த்து செல்வராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டு, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் எம்.ஆர்.சேகரை ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி இரண்டு நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து சேகரை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.