கரூர் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகில் தொடங்கிய இப்பேரணி பழைய பை பாஸ் சாலை வழியாக லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள பெரியார் சிலையில் முடிவடைந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை கழகம், சாமானிய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள், முகிலன் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் சிலை அருகில் சுமார் 200 பேர் மாட்டுக்கறி பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொது இடத்தில் மாட்டுக்கறி பிரியாணி வழங்க கூடாது
என கரூர் மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து அங்கு அதிகளவிலான போலீசார் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் கொண்டு வந்த மாட்டுக்கறி பிரியாணி குண்டாவை பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் உணர்வாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அங்கு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் மாட்டுக்கறி பிரியாணியை சாப்பிட்டனர். இதனால் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.